இரத்த அழுத்தம்
இதயம் ஒரு தசைக்குழாய் என்று ஏற்கனவே பார்த்தோம் . இது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் சுருங்கி விரிகிறது . இந்த அழுத்தம்தான் இரத்தத் திற்கும் இரத்தநாளங்களுக்கும் பரவுகிறது . இதயம் சுருங்கி , புதிய இரத்தத்தைச் சுத்த இரத்தநாளங்களுக்குள் செலுத்தும்போது , இரத்த அழுத்தம் உச்ச நிலையை அடைகிறது . இந்த உயர் இரத்த அழுத்தம் ' சிஸ்டாலிக் பிரஷர் ' ( Systolic Pressure ) என்று அழைக்கப்படுகிறது . இதயம் சுருங்கும் பொழுது இது ஏற்படுவதால் இதனைச் ' சுருங்கழுத்தம் ' என்றும் அழைக்கலாம் . இதனைத் தொடர்ந்து இதயம் விரியும் பொழுது , புதிய இரத்தம் இதயத்திற்குள் நுழைகிறது . அப்பொழுது இதய அழுத்தம் மிகக் குறைந்த அளவே இருக்கும் . இக்குறைந்த இரத்த அழுத்தம் ' டயஸ்டாலிக் பிரஷர் ' ( Diastolic Pressure ) என்று அழைக்கப்படுகிறது . இதயம் விரிந்த நிலையில் இந்த அழுத்தம் ஏற்படுவதால் இதனை ' விரிவழுத்தம் ' என்றும் அழைக்கலாம் . இந்த இருவகை இரத்த அழுத்தங்களும் ஒவ்வொரு கணமும் நம் உடலுக்குள் மாறிமாறி நிலவுகின்றன . இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி நிர்வகிக்க உடலில் பல சிக்கலான அமைப்புகள் உள்ளன . சிறுநீரகங்கள் , அட்ரீனல் சுரப்பிகள் , மூளை , நரம்பு மண்டலம் முதலியன இதில் முக்கியப் பங்கு பெறுகின்றன . இவற்றின் பயனாக , உடலில் இயல்பாகவே சீரான இரத்த அழுத்தம் நிலவுகிறது . ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இயல்பு இரத்த அழுத்தம் ( Normal Blood Pressure ) என்று கூறுவர் . இதில் 120 என்பது சுருங்கழுத்தம் ; 80 என்பது விரிவழுத்தம் . ஆனால் இது அனைவருக்குமே சொல்லி வைத்தது போல் 120/80 என்று இருக்காது . ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள் , உடல் , எடை , உயரம் போன்றவை வேறுபடுவதுபோல சுருங் கழுத்தமும் விரிவழுத்தமும் சற்று வேறுபடலாம் . ஆகவேதான் உலக நலவாழ்வு நிறுவனம் ( World Health Organisation ) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. பாதரச அளவு முதல் 140/90 மி.மீ. பாதரச அளவு வரை உள்ள இரத்த அழுத்தத்தை ' இயல்பு இரத்த அழுத்தம் ' எனக் கொள்ளலாம் என்று வரையறை செய்துள்ளது .
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகம் மற்றும் அட்ரீனல் சுரப்பிகளின் பங்கு :
உடலில் இரத்த அழுத்தம் குறையும்போது , சிறுநீரகங்களிலிருந்து ' ரெனின் ' ( Renin ) என்னும் இயக்குநீர் சுரந்து , இரத்தத்தில் ' ஆஞ்சியோடென்சின் ' ( Angiotensin ) எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது . இது தமனி நாளத்தைச் சுருங்கச் செய்து , இரத்த அழுத்தத்தை அதிகமாக்குகிறது . அதே நேரத்தில் அட்ரீனல் சுரப்பிகளிலிருந்து ' ஆல்டோஸ்டீரோன் ' ( Aldosterone ) என்னும் இயக்குநீர் சுரந்து , இரத்தத்தில் சோடியம் அளவை அதிகரிக்கச் செய்து , இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது . இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வந்ததும் , ரெனின் மற்றும் ஆல்டோஸ்டீரோன் சுரப்பது நின்று விடுகிறது .
இரத்த அழுத்தம்
April 01, 2021
0
Tags