கடவுளின் குழந்தைகள்..!
பிறருடைய இன்பதுன்பங்களை நம்முடையவையாக எண்ணும் மனம் வேண்டும். நான் என்கிற எண்ணத்தை விரிவுபடுத்திக் கொண்டே போய் எல்லோரும் ''நான்'' என்கிற பொது நோக்கத்திற்கு வந்து விட வேண்டும்.
இதனால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதெல்லாம் எங்கேயோ, எப்பொழுதோ வரப் போவதற்காகச் சொன்ன வழியன்று. இங்கேயே, இந்த உடம்பில் வாழும் பொழுதே செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னதாகும். இந்த உடம்பு நமக்கு அதற்காகத் தரப்பட்டதேயாகும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த உடலில் உயிர்க் காற்று இருக்கும் பொழுதே நம்முடைய ஆசாபாசங்களே அகற்றி பேதமற்ற மனதை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் ஒரே குடும்பம்.
உள்ளத்தாலும், உணர்வாலும் எல்லோரும் ஒன்றே. உண்மைக்குப் பல வடிவங்கள் இருக்கலாம். ஆனால், வேற்றுமைகள் இருக்க முடியாது. இத்தகைய பேதமற்ற தூய உள்ளத்தில்தான் அறிவு உதயமாகும்.
நான் நான் என்று எதை, எதைக் கொண்டு நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அதுதான் - அந்த அறிவுதான் தெய்வம். அதுதான் பரம்பொருள். அதுதான் ஆத்மா.
ஆத்மா என்கிறன அந்தப் பிரகாசம் உன்னிடம் இல்லை என்றால், உன்னால் பரம்பொருளைப் பற்றி நினைக்கவே முடியாது. இதையே வேதாந்தம் சொல்கிறது. நாம் அந்தத் தத்துவத்தைத் தேடி எங்கெல்லாமோ போய்க் கொண்டிருக்கிறோம்.
ஆனால், தேடும் சக்தியை எது தருகிறதோ, அது உன் உள்ளேயே இருந்து கொண்டிருக்கிறது. தொடுவானத்தைத் தொடுவதற்காகப் போய்க் கொண்டேயிருந்தால், அதுவும் அப்பால் போய்க் கொண்டேயிருக்கும். நாம் தேடுகிற பரம்பொருளும் அப்படியே. நீ இருக்கிற இடமே தொடுவானம்.
ஓர் இடத்தில் மாத்திரம் இருக்கிற வஸ்து கண்ணுக்குத் தெரியும். எங்கும் நிறைந்த வஸ்து எப்படி கண்ணுக்குத் தெரியும் ? காற்றே கண்ணுக்குத் தெரிவதில்லை. காற்று புகாத இடத்திலும் உள்ள ஆகாயம் எப்படி கண்ணுக்குத் தெரியும் ? அந்த ஆகாயத்தின் அதி சூக்குமமே பரம்பொருள். அதனால் அது கண்ணுக்குத் தெரிவதில்லை. நீருக்கு நிறமில்லை. ஒளியின் பிரிதிபலிப்பாலேதான் அது கண்ணுக்குப் புலனாகிறது. அந்த நீரே குளிர்ச்சியடைந்து பனிக்கட்டியாகி விட்டால் கண்ணுக்குத் தெரிகிறது.
அது போல நம் உள்ளத்திலும் அன்பின் குளிர்ச்சி அதிகமாகி விட்டால், உருவமில்லாத பரம்பொருளின் உருவம் நம் மனதில் ஒளியாகத் தோன்றும். எனவே நாமும் துன்பப்படாமல் மற்றவர்களுக்கும் துன்பம் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உண்மையே பேச வேண்டும். முடியா விட்டால் மௌனமாக இருந்து விட வேண்டும். உன் சொல்லால் அடுத்தவனுக்குக் கெடுதல் வரும் என்று தோன்றினால், மௌனமாக இருந்து விடு என்பதே மனுநீதியின் வாக்கு. நல்ல காரியங்கள் செய்வதற்கு எப்பொழுதும் பலன் உண்டு.
எனினும் வாழ்க்கையில் சில நேரம் கெடுதல் வரும் பொழுது நம் பகுத்தறிவால் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். உலகம் ஒரு குடும்பம். நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பது ஆதி சங்கரரின் வாக்கு. தமிழ் அறிஞரும் வேதாந்தியுமான திருமூலரும், நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றே கூறியுள்ளார். - காஞ்சி மகா முனிவர்.
ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!
கடவுளின் குழந்தைகள்..!
April 01, 2021
0
Tags