Type Here to Get Search Results !

உடல் நலம் 1

இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது , சிறுநீரகம் ' காளிக் கிரெய்ன் ' ( Kallikrein ) எனும் நொதியைச் சுரக்கிறது . இது பிராடிக்கைனின் ( Bradykinin ) , காளிடின் ( Kallidin ) எனும் வேதிப்பொருள்களை உற்பத்தி செய்கிறது . இவை சிறுநீரகத்தின் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி , சிறுநீரின் அளவை அதிகரிக்கிறது . இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது . இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வந்ததும் , காளிக்கிரெய்ன் சுரப்பது நின்று விடுகிறது . உயர் இரத்த அழுத்தம் : 140/90 மி.மீ. பாதரச அளவுக்கு மேல் இரத்த அழுத்தம் காணப்பட்டால் அதனை ' உயர் இரத்த அழுத்தம் ' எனக் கருத வேண்டும் . உயர் இரத்த அழுத்த நோயாளிகளை , அவர்களுக்குரிய இரத்த அழுத்த அளவைக் கொண்டு , இளநிலை உயர் இரத்த அழுத்தம் ( Mild Hypertension ) , மிதநிலை உயர் இரத்த அழுத்தம் ( Moderate Hypertension ) , மிகுநிலை உயர் இரத்த அழுத்தம் ( Severe Hypertension ) , கொடியநிலை உயர் இரத்த அழுத்தம் ( Malignant Hypertension ) அல்லது உக்கிர இரத்த அழுத்தம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும் . சுருங்கழுத்தம் 140 முதல் 159 வரை ; விரிவழுத்தம் 90 முதல் 99 வரை இருந்தால் அது இளநிலை உயர் இரத்த அழுத்தம் . சுருங்கழுத்தம் 160 முதல் 179 வரை ; விரிவழுத்தம் 100 முதல் 109 வரை இருந்தால் மிதநிலை உயர் இரத்த அழுத்தம் . சுருங்கழுத்தம் 180 முதல் 199 வரை ; விரிவழுத்தம் 110 முதல் 129 வரை இருந்தால் மிகுநிலை உயர் இரத்த அழுத்தம் . சுருங்கழுத்தம் 200 - க்கு மேல் ; விரிவழுத்தம் 130 - க்கு மேல் இருந்து கண்களில் விழிவட்டு வீக்கம் ( Papilloedema ) ஏற்பட்டிருந்தால் கொடியநிலை உயர் இரத்த அழுத்தம் என்று கொள்ள வேண்டும் .

இரத்த அழுத்தத்தில் வேறுபாடு ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை அவருடைய இரத்த அழுத்தத்தை ஒரே ஒரு முறை மட்டும் அளந்து விட்டு முடிவு செய்யக்கூடாது . ஏனென்றால் , ஒருவரின் இரத்த அழுத்தம் வெவ்வேறு நேரங்களில் வேறுபட வாய்ப்பு உள்ளது . நிற்கும்போது , உட்கார்ந்திருக்கும் போது அல்லது படுத் திருக்கும்போது எடுக்கப்படும் இரத்த அழுத்த அளவுகளில் சற்று வேறுபாடு இருக்கும் . இதுபோன்று மகிழ்ச்சி , கவலை , கோபம் , பயம் , அதிர்ச்சி போன்ற மனநிலைகள் , மற்றும் உறக்கம் , உடற்பயிற்சி போன்றவைகளுக்குத் தகுந்தவாறு இரத்த அழுத்தம் சிறிதளவு அதிகமாகவோ , குறைந்தோ காணப்படும் . உறங்கும் போது சற்றுக் குறைந்தும் , உணர்ச்சி வசப்படும்போது மிக உயர்ந்தும் , காலை நேரத்தில் இயல்பாகவும் மாலை நேரத்தில் சிறிதளவு உயர்ந்தும் இரத்த அழுத்தம் காணப்படும் . இது தற்காலிக மாற்றமேயாகும் . உடல் ஓய்வு கொள்ளும்போது அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் . இம்மாற்றங்களை மனதில் கொண்டு , உண்மையான இரத்த அழுத்தத்தை அறிய , மருத்துவர்கள் தொடர்ந்து சில நாட்களில் குறைந்தது 5 அல்லது 6 முறை ஒருவருடைய இரத்த அழுத்தத்தை அளந்து பார்ப்பார்கள் . அவற்றில் 3 அல்லது 4 அளவுகள் 140 / 90 - க்கு மேல் இருந்தால் அப்போது அவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கிறார்கள் .  .

இரத்த அழுத்தத்தை அளக்கும்போது கவனிக்க வேண்டியவை :
1. சோதனைக்குள்ளாகும் நபர் உட்கார்ந்தோ , படுத்தோ இருக்க வேண்டும் .
2. கையில் கட்டப்படும் பட்டை ( Cuff ) இதய மட்டத்திற்கு இருக்க வேண்டும் . உயரமாகவோ , தாழ்வாகவோ இருக்கக் கூடாது .
3. கையில் கட்டப்படும் பட்டை போதுமான அளவுள்ளதாக இருக்க வேண்டும் . அப்போதுதான் தமனிநாளத்தை முழுமையாக அழுத்தி , இரத்த ஓட்டத்தை நிறுத்தி , சரியான இரத்த அழுத்தத்தைக் காண்பிக்கும் .
4. இரத்த அழுத்தமானியில் பாதரசத்தை ஏற்றியபின் இறக்கும்போது , ஒரு விநாடிக்கு 2 அல்லது 3 மி.மீ. வீதம் இறக்க வேண்டும் . மிக வேகமாக இறக் கினால் சரியான இரத்த அழுத்தத்தைக் காண்பிக்காது .

உயர் இரத்த அழுத்தம் இரு வகைப்படும் . ஒன்று , காரணமில்லா வகை ; இரண்டாவது உறுப்புச் சார்ந்தது . 95 சதவீத நோயாளிகளிடம் , உயர் இரத்த அழுத்தத்திற்குரிய காரணம் தெரிவதில்லை . காரணம் அறிய இயலாத இந்த வகைக்கு ' முதன்மை உயர் இரத்த அழுத்தம் ' ( Primary Hypertension அல்லது Essential Hypertension ) என்று பெயர் . மீதி 5 சதவீத நோயாளிகளிடம் , உயர் இரத்த அழுத்தத்திற்குரிய காரணம் தெரிந்து கொள்ள இயலும் . அந்தக் கார ணத்தைக் களைந்து விட்டால் உயர் இரத்த அழுத்தம் முழுவதுமாகக் குணமாகி விடும் . இவ்வகை இரத்த அழுத்தத்திற்குச் ' சார்பு உயர் இரத்த அழுத்தம் ' ( Secondary Hypertension ) என்று பெயர் .

முதன்மை உயர் இரத்த அழுத்தம் இவ்வகை இரத்த அழுத்தத்திற்குக் காரணம் தெளிவாகத் தெரியாது என்ற போதிலும் இது மனம் சார்ந்தது என்பது மட்டும் அறியப்பட்டுள்ளது . காரணம் , இது பெரும்பாலும் மன உளைச்சலால் வருகிறது . அதிக வேலைப்பளு , கவலை , கோபம் , பதற்றம் , பயம் , அதிர்ச்சி ஆகியவற்றால் மனம் பாதிக்கப்படும் போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது .


அவசர கதியிலான வாழ்க்கை முறையும் பரபரப்பான பணிச்சூழலும் இதற்கு வழி அமைக்கிறது . முதன்மை உயர் இரத்த அழுத்தத்திற்கு வயதும் ஒரு காரணம்தான் . வயது அதிகமாக ஆக அதற்கேற்ப இரத்த அழுத்தமும் அதிகமாகும் . இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தும் . ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்புதான் இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது . வயதாகும் போது இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை குறைவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது . பரம்பரையும் இதற்கு ஒரு காரணம் எனக் கூறலாம் . பல குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதால் இது பரம்பரையாக வரலாம் என்று ஐயப்பட ஏதுவாகிறது . அண்மைக்காலத்தில் உலக அளவில் நடந்த ஆய்வுகளில் உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கக் கூடிய மரபணுக்களைக் கண்டறிந்துள்ளனர் . அதிக உடற்பருமன் , புகை பிடித்தல் , மது அருந்துதல் , அதிக அளவு உப்பு உட்கொள்ளுதல் , நிறைய காபி குடித்தல் முதலியனவும் இவ்வகை இரத்த அழுத்தத்திற்கு வரவேற்பு அளிக்கும் .
நரம்பு மண்டலத்தின் வேதிக்கடத்திகளான ' கேட்டக்காலமின் ' ( Catechola mine ) போன்றவற்றின் காரணமாகவும் ' ரெனின் ' எனும் இயக்குநீரின் அளவு அதிகமாகும்போதும் முதன்மை உயர் இரத்த அழுத்தம் உண்டாகும் .

சார்பு உயர் இரத்த அழுத்தம்
இது ஐந்து முக்கியக் காரணங்களால் உண்டாகிறது . முதலாவது காரணம் , இதயத்திலிருந்து உடலுக்கு இரத்தம் கொண்டு செல்லும் மகாதமனியில் பிறப்பிலேயே ஓர் இடத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுவது . இதற்குப் பெருந்தமனிக் குறுக்கம் ( Coarctation of Aorta ) என்று பெயர் . இதன் விளைவாக உடலின் கீழ்ப்பாகத்தில் இரத்த அழுத்தம் குறைந்து காணப் படும் . மாறாக , இரு கைகளிலும் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் . இது சார்பு உயர் இரத்த அழுத்த வகையைச் சார்ந்தது . அறுவைச் சிகிச்சை மூலம் மகாதமனியில் சுருக்கத்தை அகற்றி விட்டால் இந்த இரத்த அழுத்தத்தை நிரந்தரமாகக் குணப்படுத்திவிடலாம் .

இரண்டாவது காரணம் , சிறுநீரகக் கோளாறுகள் . சிறுநீரக வடிமுடிச்சு அழற்சி ( Glomerulonephritis ) , சிறுநீரக நுண்குழல் அழற்சி ( Pyelonephritis ) , பல சிறுநீரக உருக்கட்டிகள் ( Polycystic Kidney Disease ) , சிறுநீரகத் தமனிநாளச் சுருக்கம் ( Renal Artery Stenosis ) , சிறுநீர் பாதையில் அடைப்பு , சிறு நீரகக் கட்டிகள் ஆகியவை ஏற்படும் போது இவ்வகை உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் .  .
                              நன்றி


Post a Comment

0 Comments